திருநெல்வேலியில் காவல் நிலையம் அருகிலேயே நடந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் . குறிப்பாக பாளையங்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனம் திருட்டு சம்பவம் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது பாளையங்கோட்டை காவல் நிலையம் அருகிலேயே குரு பரம்பரை தெருவில் மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தை திருடி சென்றனர். திருடி சென்ற சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் மூன்று பேர் கொண்ட கும்பல் குடியிருப்பு பகுதியில் அங்குமிங்கும் நோட்டமிட்டபடி நடந்து செல்கின்றனர் பின்னர் சைட் லாக் செய்யாத வாகனத்தை நோட்டமிட்டு அதை திருடி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது.
ஆனால் இதுவரை அந்த இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இருப்பினும் சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையம் அருகிலேயே நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது







