நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள “மண்டாடி” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராகயிருந்த நடிகர் சூரி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான “விடுதலை” படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். மதிமாறன் இயக்கத்தில் மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் பெரிய பொருள் செலவில் தயாராகிறது.
கடலின் பிரமாண்டமான பின்னணியிலும், பரபரப்பான படகுப் பந்தய உலகத்தையும் மையமாகக் கொண்டு நகரும் இப்படம், துணிச்சல், லட்சியம், தலைமைத்துவம், அடையாளம் மற்றும் விடாமுயற்சி போன்ற கருப்பொருட்களை ஆழமாக ஆராய்கிறது. உணர்வுபூர்வமாக ஈர்க்கக்கூடியதோடு, காட்சியமைப்பிலும் பிரமிப்பூட்டும் அனுபவத்தை வழங்கும் கதையாக இது உருவாகியுள்ளது.
எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் தெலுங்கு நடிகர் சுஹால், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மண்டாடி’ படம், படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ரூ.75 கோடி செலவில் உருவாகி வரும் இந்த படம், சூரியின் நடிப்பில் முதல் பிரம்மாண்டப் படமாக இருக்கும் என்று தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘மண்டாடி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 4ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. தற்போது, படம் இறுதிக்கட்ட பின்னணிப் பணிகளில் (Post Production) உள்ளது. படத்தொகுப்பு, ஒலியமைப்பு, காட்சி விளைவுகள் (VFX), டப்பிங் மற்றும் இசைத் தயாரிப்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.




