சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போனை திருடிய சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோயம்பேடு பேருந்து நிலையம், டாக்டர் எம்ஜிஆர் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் பயணிகள், பொதுமக்கள் கூட்டமாக இருப்பதை பயன்படுத்தி செல்போன், பணம் மற்றும் உடமைகள் திருடு போவது அவ்வப்போது தொடர்கதையாகி வருகிறது.
அந்த வரிசையில் எழும்பூர் ரயில் நிலையம் அருகே சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றித்திரிந்த சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் பதிலளித்துள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர்கள் 2 பேரும் செல்போன்களை திருடி வந்தது தெரியவந்தது.
பின்னர் அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு சென்று போலீசார் பார்த்தபோது, அங்கு பதுக்கி வைத்திருந்த 47 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்கள் எந்தெந்த பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டார்கள் எங்கு எல்லாம் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும் இவர்களது கூட்டாளிகள் எங்குள் உள்ளார்கள் என்பது தொடர்பாக எழும்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்








