பல்லடம் அருகே பாச்சாகவுண்டம்பாளையத்தில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஆலை கழிவுகளை குட்டையில் திறந்து விட்டதாக புகார் எழுந்த நிலையில், மண்ணைக் கொட்டி மூட வந்த வாகனங்களை விவசாயிகள் சிறை பிடித்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாச்சாகவுண்டம்பாளையத்தில் ஆலை கழிவுகள் சுத்திகரிக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. பதினைந்துக்கும் மேற்பட்ட தனியார் கம்பெனிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்களை மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அருகில் உள்ள குட்டையில் கலப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், அதிகப்படியான கழிவு நீர் வெளியேற்றப்பட்டதை மறைக்க சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இரண்டு டிராக்டர்கள் மூலம் மண்ணைக் கொண்டு வந்து கொட்டி உள்ளனர். இதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் இரண்டு டிராக்டர்களையும் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கழிவு நீர் குட்டையில் கலப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதை மறைப்பதற்காக மண்ணை கொட்ட வந்த இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.
—சௌம்யா.மோ






