இரண்டு முறை உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற வெஸ்ட் இண்டீசு அணி 2023 இல் தகுதி கூட பெற முடியாத அவல நிலையில் உள்ளது. வெஸ்ட் இண்டீசு அணிக்கு என்னதான் ஆயிற்று என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
காலம் கடினமானது, வரலாற்றின் முதல் பக்கம்., வட அமெரிக்க திசை தொட்டு,
தனித்தீவுகள் சூழ, திறன் மட்டுமே ஆதாரம் கொண்டு, ஒரு துள்ளிய குறிக்கோளுடன், கரீபியர்கள் வருவர், சரித்திரம் படைப்பர், இப்படை தோற்கின், எப்படை வெல்லும் என்ற தொனியில், நெஞ்சமெல்லாம் நடு நடுங்க செய்யும் அளவிற்கான கூட்டம் அது….
அவர்களை அஞ்சி நடுங்கிய நாடுகள் குறித்த கதைகள் அடங்கிய சில பக்கங்கள் கிழிந்தாலும்.. அவர்களை கண்டு நடுங்கிய பல நாடுகளின் பத்திரிக்கைகள் ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை.
அவர்கள் யார்..? கொள்ளைக்காரர்களா? மாயாஜாலங்கள் நிறைந்த தந்திரர்களா? இல்லை, மேற்கு இந்திய தீவுகள் அணியின் மிரட்டல் பலம் கொண்ட கிரிக்கெட் ஆட்டக்காரர்கள்தான்.
தி கிரேட் வெஸ்ட் இண்டீஸ்…
இன்றைய தினம் எண்ணற்ற விமர்சனங்களுக்கு உள்ளாகும் வெஸ்ட் இண்டீஸ் அணியை 1970 முதல் 1990 வரையிலான கால கட்டங்களில், கண்டு அஞ்சாத அணிகளே இல்லை.
சாமர்த்தியம் அடங்கிய முரட்டுத்தனமான பேட்டிங், தவறவிட்டால் தலை உடைந்து போகும் அளவிலான பவுன்சர்கள், வீசும் வேகமே கணிக்க இயலாத வகையிலான ஆக்ரோஷமான பந்துவீச்சு என, இன்றைய காலத்தின் எண்ணிலடங்கா கற்பணைகளுக்கு காவியமாக விளங்கிய அணி தான் விண்டீஸ்.
லேரி கோம்ஸ், ரிச்சி ரிச்சர்ட்சன், குஸ் லோகி, ஜெஃப் டுஜான், ஜோயல் கார்னர், மைக்கல் ஹோல்டிங், கோர்டன் கிரீனிட்ஜ், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், ஆண்டி ராபர்ட்ஸ், கிளிவ் லோய்ட், கர்ட்லி ஆம்ப்ரோஸ், மற்றும் விவ் ரிச்சர்ட்ஸ் ஆகிய வீரர்களின் ருத்ர தாண்டவம், விண்டீஸ் அணிக்கு பொற்காலம் என்றே சொல்ல வேண்டும்.
1975 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி, முதல் அத்தியாயத்தை எழுதியது விண்டீஸ். அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தையும், விண்டீஸ் நியூசிலாந்து அணியையும் வீழ்த்தியதை அடுத்து, விண்டீஸ், ஆஸி அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. உலகப் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, உலக கிரிக்கெட்டின் முடி சூடா மன்னர்களாக தங்களை தரம் உயர்த்திக் கொண்டனர் விண்டீஸ் அணியினர்.
அன்று தொட்டு, சர்வதேச ஒருநாள் உலகக் கோப்பை தொடர் மீதான ஆர்வம் அனைத்து அணிகளையும் தொற்றிக் கொள்ள, அடுத்த 4 ஆண்டுகளுக்கும் ஆதிக்கம் தொடர்ந்தது. அதே பார்மில் இருந்த விண்டீஸ் அணி 1979 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நுழைந்தது. இங்கிலாந்து பாகிஸ்தானை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைய, விண்டீஸ் அணியோ முந்தைய சீசன் போலவே நியூஸியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
கிரிக்கெட்டின் பிறப்பிடம் என சொல்லப்படும் அதே லார்ட்ஸ் மைதானத்தில், சொந்த மண் பலத்துடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட விண்டீஸ், 92 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. சிறுக சிறுக ஜாம்பவான்களாக உறுவெடுத்து வரும் விண்டீஸ் அணியின் விளையாட்டு மற்ற அணிகளை அச்சுறுத்தியது மட்டுமல்லாமல், கரீபியர்களுக்கு எதிராக, திரைப்படங்களில் வருவது போல கட்டுக்கதைகளையும் சித்தரிக்க ஆரம்பித்தன.
அடுத்த அத்தியாயம் வந்தது, 1983 இது இந்தியர்களுக்கு மறக்க முடியாத ஒரு வரலாறு. ஆம் கட்டுக்கதைகளுக்கு சொந்தக்காரர்களான கரீபியர்களை மற்ற நாடுகள் அன்னார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த தருணத்தில், ஒரே ஒரு இறுதிப் போட்டியில் மொத்த வரலாறையும் திருத்தி எழுதியது இந்தியா. இந்த அணியை வீழ்த்தவே முடியாது என எல்லி நகையாடிய தருணங்கள் தாண்டி, இந்தியாவின் தவப்புதழ்வன் கபில் தேவ் மற்றும் இந்தியர்களின் கூட்டு முயற்சியால் பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா.
அந்த முக்கியத் தருணம் தான் இந்திய மக்களிடையே கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அதிகரித்ததோடு, இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சியையும் பெருக்கியது. சரி இருந்தாலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை வென்றுவிடும் என நம்பப்பட்ட விண்டீஸ் அணியின் கனவை இந்தியா தவிடு பொடியாக்கியது அன்றோடு நின்று விட்டது என்றே சொல்லலாம். அதன் பிறகு, விண்டீஸ் அணிக்கும், ஒருநாள் உலகக் கோப்பைக்கும் தூரங்கள் மட்டுமே பெருகியதே தவிர வாய்ப்பு அமையவில்லை.
1987 மற்றும் 1992 ஆகிய வருடங்களில் குரூப் சுற்று, 1996 – இல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம், 1999 மற்றும் 2003 இல் குரூப் சுற்று, 2007 இல் சூப்பர் 8, 2011 மற்றும் 2015 காலிறுதி போட்டி, 2019 இல் குரூப் சுற்று என கடந்த 10 உலகக் கோப்பை தொடர்களாக அடுத்தடுத்து கோப்பைக்கான வாய்ப்பு அமையாமலே இருந்த விண்டீஸ் அணியின் மீதான விமர்சனங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல…
பொருளாதார நெருக்கடி, திறன் மேம்பாட்டு பயிற்சி வாய்ப்பின்மை, தகுந்த ஆலோசனையின்மை, தலைமை பொறுப்பில் சிக்கல் மற்றும் நிர்வாக சிக்கல் என அடுத்தடுத்து அணியினுடைய கட்டமைப்பு சம்பந்தமான விஷயங்களில் அவ்வப்போது விசைப்படகில் ஓட்டை விழுவது போல எழுந்து வந்த சிக்கல்களால் மேலும் உடைந்து போனது விண்டீஸ். டி20 உலகக் கோப்பைகளை தன்னகப்படுத்திக் கொண்ட விண்டீஸ் அணிக்கு, கிரிக்கெட்டின் முக்கிய பார்மேட்டான ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இழந்த பலம் அனைத்தையும் மீட்டு கொண்டுவர இயலவில்லை.
இறுதியாக கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுக்க தவறிவரும் விண்டீஸ் அணியால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதிப் பெறும் வாய்ப்பு இழக்க நேர்ந்தது. இதனால் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் தகுதிச் சுற்று போட்டிகளில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளின் கை ஓங்க, விண்டீஸ் அணிக்கு பெறும் அதிர்ச்சியை கொடுத்தது ஸ்காட்லாந்து அணி. குரூப் சுற்று போட்டிகளில் எதிர்பார்த்தது போன்ற முடிவுகளை எட்ட முடியாத விண்டீஸ் அணிக்கு, சூப்பர் 6 சுற்றில் கூடுதல் அதிர்சி காத்திருக்க, ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வியை தழுவிய விண்டீஸ் அணி, உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக தகுதி கூட பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.
ஸ்காட்லாந்து அணியுடனான தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதைத் தாண்டி, முதல் முறையாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க முடியாத சூழலுக்கு அந்த அணி தள்ளப்பட்டிருப்பதை ஜீரணித்துக் கொள்ள முடியாத ஒவ்வொரு விண்டீஸ் ரசிகர்களும், கண்ணீர் மல்க அந்த அணியை பார்த்தாலே தெரியும், அந்த வலி எத்தகைய தன்மையானது என்று…முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என ஒவ்வொருவரும் எதிர்பார்க்காத இந்த தோல்வியால் துவண்டுபோனது விண்டீசை சார்ந்தவர்கள் மட்டுமல்ல… உலகக் கிரிக்கெட் ரசிகர்களும் தான். இரண்டு முறை உலக சாம்பியனான ஒரு அணி இவ்வாறு முதல் முறையாக தகுதி கூட பெற முடியாமல் வெளியேறியிருக்கும் நிலையால், அந்த அணியில் மீண்டும் துவக்கத்தில் இருந்து கட்டமைக்கும் நிலை எழுந்துள்ளது.
ஒருவேளை இந்த தோல்வியில் இருந்து விண்டீஸ் அணி தங்களது திறன் மேம்பாடு, புது யுக்திகளை கையாளுதல் மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கு முன்னேறி செல்வது குறித்து சிந்திக்க ஆரம்பித்தால் மட்டுமே மீண்டும், மீண்டு வர இயலும். இது ஒவ்வொரு விண்டீஸ் ரசிகரின் கனா என்றே சொல்லலாம்…
-நாகராஜன், நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ்







