“ மாவீரன்” படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லரில் “எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்” என்கிற வசனம் இடம்பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. இந்த படத்தை ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 14-ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக ’வண்ணாரபேட்டையில’ என்கிற இரண்டாம் சிங்கிள் பாடல் கடந்த ஜூன் 14-ம் தேதி அன்று வெளியானது.
இந்நிலையில், மாவீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ஜூலை 2 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லரில் “எமனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்” என்கிற வசனம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.







