’காடப்புறா கலைக்குழு’ படத்தின் ட்ரெய்லரை தனுஷ் பார்த்து பாராட்டியதாக இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் காளி வெங்கட் தெரிவித்துள்ளார்.
சக்தி சினி புரடக்ஷன் சார்பில், டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிராமத்துக் கரகாட்ட கலையின் பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு’.
இப்படம் எதிர் வரும் ஜூலை 7 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் பேசிய நடிகர் காளி வெங்கட் தெரிவித்ததாவது..
” சினிமா கேரியரில் எனக்கு இது மிக முக்கியமான படம். இப்படத்தின் இயக்குநர் குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கம். ராஜா குருசாமி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் படம் எடுத்தது எனக்கு மகிழ்ச்சி.
இப்படத்திற்கு ஹென்றி மிக எளிமையாக அனைவருக்கும் பிடிக்கும்படி இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் முனீஷ்காந்த் ஆடியதை இங்கு வீடியோவில் பார்த்தேன் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவது மிக மகிழ்ச்சி. லோகேஷனில் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்தார்கள் அவருக்கு நன்றி. தனுஷ் சார் இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துப் பாராட்டினார். உங்களுக்கும் படம் பிடிக்கும் ” என காளி வெங்கட் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் முனிஸ்காந்த் தெரிவித்ததாவது..” இந்தப் படம் முண்டாசுப்பட்டி படம் போன்று ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளோம், அனைவரும் இணைந்து கலகலப்பாகப் படப்பிடிப்பை நடத்தினோம், இயக்குநர் பெரும் உழைப்பை இப்படத்திற்கு கொடுத்துள்ளார்.
இந்தப் படத்தின் மீது மிகவும் நம்பிக்கை வைத்து இரவு பகல் பாராமல் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படி ஒரு கலைப் படைப்பை உருவாக்கியுள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. நான் இந்த படத்தில் கரகாட்டம் ஆட முயற்சி செய்துள்ளேன், அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது , படம் கண்டிப்பாக வெற்றியடையும் வாழ்த்துகள்.” என தெரிவித்தார்.







