புதிய தொழில்நுட்ப விதிகளைப் பின்பற்றி, ட்விட்டர் நிறுவனம் அதிகாரிகளை நியமித்துள்ளதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ட்விட்டா், முகநூல் போன்ற சமூக வலைதளங்களை நெறிப்படுத்த, மத்திய அரசு விதித்த புதிய தொழில்நுட்ப விதிகள் கடந்த மே மாதம் அமலுக்கு வந்தன.
அதன்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனா்களைக் கொண்ட சமூக ஊடகங்கள், குறைதீா்க்கும் அதிகாரி, கட்டுப்பாட்டு அதிகாரி, தலைமை குறைதீா்க்கும் அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும் என்றும் இவர்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்றும் அவர்களின் பெயா், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், குறைதீா்க்கும் அதிகாரியை நியமிக்காமல் இருந்த ட்விட்டர் நிறுவனம் பிறகு தற்காலிக அதிகாரியை நியமித்தது. இதனையடுத்து மத்திய அரசு, ட்விட்டா் நிறுவனத் துக்கு எதிராக, டெல்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு ஆகஸ்ட் 6-ஆம் தேதி வந்தபோது, புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளைப் பின்பற்றி குறைதீா் அதிகாரிகளை நியமித்துள்ளதாக ட்விட்டா் நிறுவனம் தெரிவித்தது.
அதைத் தொடா்ந்து, அந்த நிறுவனம் அளித்த விளக்கம் மீது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பிரமாணப் பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதிய தொழில்நுட்ப விதிகளுக்கு உள்பட்டு ட்விட்டா் நிறுவனம் அதிகாரிகளை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணை, அக்டோபா் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.








