உத்தரபிரதேசத்தில் 25-வது மாடியிலிருந்து சென்னையைச் சேர்ந்த இரட்டையர்கள் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் சித்தார்த் விகாரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் சென்னையைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 14 வயதில் சூரியநாராயணன், சத்யநாராயணன் என்ற இரட்டை குழந்தைகளும், மகள் ஒருவரும் உள்ளனர்.
சிறுவர்களின் தந்தை பணியின் காரணமாக மும்பை சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் இரட்டையர்கள் குடியிருப்பின் 25-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிறுவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவர்கள் நள்ளிரவில் நிலாவை பார்க்க ஆசைப்பட்டு, தெரியாமல் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் பல்லியை விரட்ட முயன்றபோது கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகு மரணத்திற்கான காரணம் தெரியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







