மழை வெள்ளத்தால் கேரளா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அம்மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திமுக ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. அங்குள பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சிலர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவது 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு பணியில் ராணுவம், கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு படை ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு திமுக ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கின் காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, இடப்பெயர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள். பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைநதுள்ளன. பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில், தி.மு.க. அறக்கட்டளை சார்பாக, ’கேரள முதலமைச்சர் நிவாரண நிதி’க்கு ஒரு கோடி ரூபாயை தி.மு.க. அறக்கட்டளை தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்தப் பெருவெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் பாதிப்புக்கு ஆளாகி இருப்போருக்கு ஆறுதலையும் திமுக தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








