தவெக மகளிர் அணி புகார்: உதயநிதி வீடு முன்பு போலீசார் குவிப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு குறித்து தவெகவினர் புகார் அளித்த நிலையில் அவரது வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் பனகல் மாளிகை முன்பு நேற்று திமுக சார்பில், காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசிய போது முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சையான கருத்தை கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கு அமைச்சர்கள் ஆதவ்ர் அர்ஜுணா, என்.ஆனந்த் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சையில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை கோரியும் தஞ்சை காவல் நிலையத்தில் தவெக மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு எதிராக தவெக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி வீட்டை சுற்றி போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.