மதம் மாறி இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விவகாரம் – உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர், கடந்த 2015-ஆம் ஆண்டு இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறித் தனது பெயரை ‘சமீர் அகமது’ என மாற்றிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, தமக்கு ‘முஸ்லிம் லெப்பை’ என்ற சமூகப் பிரிவின் கீழ் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார். ஆனால், அவரது விண்ணப்பம் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இந்து மதத்திலிருந்து இஸ்லாமிற்கு மாறிய ஒருவர், தனது முந்தைய சமூக அடையாளத்தைக் காட்டி பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் கோர முடியாது. குறிப்பிட்ட சில சமூகத்தினர் இஸ்லாமிற்கு மாறினால் அவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் வழங்கலாம் எனத் தமிழ்நாடு அரசு பிறப்பித்திருந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் உள்ளிட்ட இந்து அல்லாத மதங்களுக்கு மாறியவர்கள், தங்களது முந்தைய சமூக அடையாளத்தின் அடிப்படையில் அரசியலமைப்புப் பிரிவு 16 (4)-ன் கீழ் பிற்படுத்தப்பட்ட சமூக நிலைக்கான இடஒதுக்கீட்டைக் கோர முடியாது. அரசியலமைப்பின் பட்டியல் சாதி பிரிவின்படி, இந்து, சீக்கியர், பௌத்த மதங்களைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றுபவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராகக் கருதப்பட மாட்டார்கள். எனவே, வேறு மதத்திற்கு மாறும்போது அத்தகைய நபர் பட்டியல் சாதி அந்தஸ்தையும் அதன் பலன்களையும் முற்றிலும் இழக்கிறார்.

ஒரு நபர் இஸ்லாம், கிறிஸ்தவம் அல்லது வேறு ஏதேனும் இந்து அல்லாத சமூக அமைப்பிற்கு மாறிய பிறகு, முந்தைய மதத்தைச் சேர்ந்த உறுப்பினர் தகுதியின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கான பலன்களைக் கோர முடியாது. இந்துவிலிருந்து இஸ்லாமிற்கு மாறும் ஒருவர், தனது முந்தைய சாதி அந்தஸ்தைப் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் என்ற வகுப்புப் பிரிவிற்கு மாற்ற முடியாது. எனவே, மதம் மாறிய நபருக்குப் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த உத்தரவையும் உறுதி செய்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்யப்படுகிறது என தீர்ப்பு வழங்கினர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் இது போன்ற விவகாரங்கள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வரும் நிலையில் அதில் முடிவு காண்பதற்கு முன்பாகவே தமிழ்நாடு அரசின் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது தவறானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.