“குடிநீர் பிரச்சினையை சொல்ல வந்தவரை தாக்கிய தவெக எம்.எல்.ஏ.!” – அதிமுக குற்றச்சாட்டு!

தொகுதியில் 10 நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் குறை கூற வந்த கார்த்தி என்பவரை, துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் கண்மூடித்தனமாக தாக்கியதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

துறையூர் தொகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாதது தொடர்பாகக் குறை தெரிவிக்க வந்த நபர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரின் செயல்பாட்டைக் கண்டித்து அதிமுக விமர்சனம் முன்வைத்துள்ளது. இது தொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில்,

“பத்து நாளா தண்ணி வரல அப்டின்னு தன்னோட பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அந்த தொகுதிக்கான, அந்த தொகுதி மக்களுக்கான எல்லைக் காப்பாளர் அப்டின்னு வசனம் பேசினாரே ரீல் முதல்வர் விஜய். உங்கள் கட்சியின் துறையூர் “எல்லைக் காப்பாளர்” மக்களைக் காப்பாற்றும் லட்சணத்தைப் பார்த்தீர்களா?

உங்களுக்கு வாக்களித்த சாமானிய மக்கள் அவங்களோட குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா? மேலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள்! ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதி மக்களிடம் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளா இவை! இப்படி மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய துறையூர் ஆச்சரியக்குறி சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? இல்லை இதனையும் வாய் மூடி மௌனியாக வேடிக்கைதான் பார்க்கப் போகிறீர்களா?” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.