“பிணவறையைக் கூட விட்டு வைக்காத தவெக-வினரின் ரீல்ஸ் வெறி!” – வானதி சீனிவாசன் கணடனம்

பிணவறையை Content எடுக்கும் கூடாரமாக மாற்றும் தவெகவினரின் ரீல்ஸ் வெறி மிகவும் அருவருக்கத்தக்கது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜக் முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை பிணவறைக்குள் வியாசர்பாடியைச் சேர்ந்த தவெக நிர்வாகி தீனா என்ற தினேஷ்குமார் உள்ளிட்டோர் லஞ்சம் கொடுத்து அத்துமீறி நுழைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த உடல்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிட முயன்றதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

உயிரற்ற உடல்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டிய பிணவறையையே Content எடுக்கும் கூடாரமாக மாற்றும் அளவுக்கு தவெகவினரின் ரீல்ஸ் வெறி சென்றிருப்பது மிகவும் அருவருக்கத்தக்கது கண்டிக்கத்தக்கது.

துயரத்தில் இருக்கும் குடும்பங்களின் உணர்வுகளையும், இறந்தவர்களின் கண்ணியத்தையும் துளியும் மதிக்காத இத்தகைய செயல்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், லஞ்சம் கொடுத்து பிணவறைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுவது, அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் எந்த அளவுக்கு வேரூன்றியுள்ளது என்பதையும் இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது.

எனவே, இத்தகைய படுபாதக செயலைச் செய்தவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.