திருவள்ளூரில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ – புதுமண தம்பதிக்கு வாழ்த்து!

திருவள்ளூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யின் இறுதிக்கட்ட பிரசாரம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.

தவெக தலைவர் விஜய் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியிலும், சென்னை வில்லிவாக்கம், அண்னாநகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக பனையூர் இல்லத்தில் இருந்து புறப்பட்ட விஜய் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு, தவெக தொண்டர்களும், பொதுமக்களும் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கொளப்பஞ்சேரி அருகே விஜயின் வாகனத்தை நிறுத்தி அவரிடம் புதுமணத் தம்பதி வாழ்த்து பெற்றனர். விஜய் ரோடு ஷோ காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.