மத்திய – மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவைக் கலைத்த தவெக அரசு – திமுக கண்டனம்!

உயர்மட்ட குழு கலைக்கப்பட்டதற்கு திமுக மீதுள்ள வன்மத்தின் காரணமாக மாநில உரிமைகளைக் காவு கொடுப்பதாக திமுக கண்டம் தெரிவித்துள்ளார்.

திமுக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “திமுக மீதுள்ள வன்மத்தின் காரணமாக மாநில உரிமைகளைக் காவு கொடுக்கும் தவெக அரசின் சின்ன புத்தி கடும் கண்டனத்திற்குரியது.

மத்திய – மாநில உறவுகளைக் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவைக் கலைத்து மாநில உரிமைகளுக்கு மாபெரும் துரோகம் இழைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

எதையும் உருவாக்கும் திறனும் இன்றி, அடுத்தவர் உருவாக்கியதைப் பேணும் முதிர்ச்சியும் இன்றி இழிவான அரசியலில் இறங்கியுள்ளது மூடர்கூடத் தவெக அரசு!

திராவிட மாடல் அரசில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் மிக நீண்ட அனுபவமும், ஆராயும் பொருண்மையில் ஆழ்ந்த அறிவும் மிக்க வல்லுநர்கள். அப்பழுக்கற்ற நேர்மையாளர்கள் என்ற பெயரைத் தங்கள் பணிக்காலத்தில் ஈட்டியவர்கள்.

இவர்களால் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முதல் பாகம் இந்தியா முழுவதும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முயற்சி எனப் பல தலைவர்களும் அதனைப் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா முதலியோர் இந்த அறிக்கையைப் பாராட்டி, அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதங்களை மூடர்கூடத் தவெக அரசு படித்துப் பார்க்க வேண்டும்.

கழக அரசில் அமைத்த குழு உறுப்பினர்களின் நேர்மையிலும், அவர்களது அறிக்கையின் தரத்திலும் என்ன முயன்றாலும் குறைகாணவோ குற்றம் சாட்டவோ முடியாது என்பதால் மிக அற்பமான ஒரு காரணத்தைக் கூறி, குழுவைக் கலைத்திருக்கிறார்கள்.

குரியன் ஜோசப் அவர்கள் தலைமையிலான குழு சட்டத்தின் வழியே அமைக்கப்பட்ட அமைப்பு (statutory body) அல்ல என்றும், ஏற்கெனவே உள்ள தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளுடன் இது ஒத்துப் போகிறது என்றும் மொன்னையான காரணத்தைக் கூறியுள்ளது தவெக அரசு.

ஆனால், இவர்கள் கூறும் சட்ட ஆணையமே ஒரு statutory body அல்ல என்பதை சுட்டிக்காட்டியுள்ளதோடு, குரியன் ஜோசப் அவர்கள் அளித்த அறிக்கை மிகவும் போற்றத்தக்கது எனவும் திராவிட மாடல் அரசின் முயற்சிக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளது.

அதுமட்டுமின்றி, ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து ஆராய இதற்கு முன்பு அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணையம், பூஞ்சி ஆணையம் ஆகிய அமைப்புகளும் statutory body அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

குரியன் ஜோசப் குழு அறிக்கையின் முதல் பாகம் பெற்ற பாராட்டைப் பொறுத்துக் கொள்ள முடியாத காழ்ப்புணர்ச்சியிலும், அடுத்த பாகம் வெளிவந்தால் மாநில உரிமைகள் குறித்த விவாதம் இந்திய அளவில் தீவிரமடையும் என்ற அச்சத்திலும் குழுவைக் கலைத்துள்ளது த.வெ.க. அரசு.

மாநில உரிமைகளுக்காகக் கழக அரசில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் முயற்சிக்கு மூடுவிழா நடத்தியுள்ள தவெக அரசின் சின்ன புத்தி அரசியலை வரலாறு மறக்காது, மன்னிக்காது! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.