திமுக எம்பி கனிமொழி எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் உரிமைப் போராட்டத்திற்கு வழிகாட்டும் வகையிலும் திமுக ஆட்சியில் நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைத் தவெக அரசு கலைத்திருப்பது கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே இந்தக் குழு ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தங்களது ஆய்வறிக்கையின் முதல் பாகத்தைச் சமர்ப்பித்துவிட்ட நிலையில், குழுவின் பணி முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே கலைப்பதற்கான அவசியம் என்ன? மாநில சுயாட்சிக் கொள்கையின் மீதான வெறுப்பா? இல்லை டெல்லி தலைமையின் உத்தரவா?
மாநில தன்னாட்சி உரிமையைப் பாதுகாப்போம் என்று வசனம் பேசிக்கொண்டே மாநில சுயாட்சிக்குக் குழிபறித்திருக்கிறது தவெக அரசு. இந்தியாவில் கூட்டாட்சி அரசியலை வலுப்படுத்துவதற்கான தமிழ்நாட்டின் முன்னெடுப்பைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




