‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்ததில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஏழை, எளிய, பெண்களுக்கு தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ஏழை எளிய நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோருக்கு ரூபாய் 6 லட்சம் மதிப்பில் தையல் மிஷின்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக ஆட்சி மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் மனுக்களை கொடுக்கிறார்கள். நிச்சயமாக பொதுமக்கள் வழங்கும் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தற்போதைய தமிழக முதல்வர், முதலமைச்சர் ஆவதற்கு முன்னரே பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 11 ஆயிரம் மனுக்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பெறப்பட்டது என்றும், அதில் 72 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.








