துருக்கியில் ஏற்ப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. அவற்றில் இந்தியர்களின் நிலை என்ன என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்துன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை துருக்கியில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தில் 20,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில், நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவினருடன் இந்திய விமானப்படையின் 6 விமானங்கள் துருக்கி சென்றடைந்தன. இந்த விமானங்களில், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அவசரகால மருந்து பொருட்கள் உள்ளன.
துருக்கி மற்றும் இந்தியா இடையிலான நட்பை உறுதி செய்யும்வண்ணம் இந்த அவசர கால நிவாரண குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதற்கு “ஆபரேசன் தோஸ்த்” என்று பெயர் வைத்துள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஆபரேசன் தோஸ்த் குறித்த செயல்பாடுகளை பற்றி இந்திய வெளியுறவுத்துறை செயலர் சஞ்சய் வர்மா ஊடகங்களிடம் தெரிவித்ததாவது..
“3000 இந்தியர்கள் துருக்கியில் வசிக்கின்றனர். அவர்களில் 1850 பேர் தலைநகரான இஸ்தான்புல்லை சுற்றி வசிக்கின்றனர். 250 பேர் அனார்கா பகுதியில் வசித்து வருகின்றனர். மீதமுள்ள நபர்கள் துருக்கி முழுவதும் பரவலாக வசித்து வருகின்றனர்.
தெற்கு துருக்கியின் அதானா பகுதியில் இந்திய தூதரகம் சார்பாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் துருக்கி மொழி பேசும் இருவர் உட்பட தூதரக அதிகாரிகள் மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
துருக்கி நிலநடுக்கத்தில் இடிந்து வீழ்ந்த மலாத்யா ஹோட்டலுக்கு அருகே வசித்த 10 இந்தியர்கள் நீண்ட தேடுதலுக்குப் பிறகு பாதுகாப்பாக இருப்பதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே ஒரு இந்தியரை மட்டும் காணவில்லை. அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என சஞ்சய் வர்மா தெரிவித்தார்.
– யாழன்







