அதிமுகவை மீட்க வேண்டும் என்கிற இலக்கை நோக்கியே பயணிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இபிஎஸ், ஓபிஎஸ் பிரதமரை சந்தித்திருப்பது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் தங்களது இலக்கு எனவும், தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்து தங்கள் இலக்கை நோக்கிதான் பயணம் செய்கிறோம் என்று கூறினார்.
அதிமுக – அமமுக இணையுமா என்ற கேள்விக்கு, “யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது” என்ற டிடிவி தினகரன், கொள்கைக்காக வந்தவர்கள் எல்லாம் அமமுகவில் இருக்கிறார்கள் எனவும், சுயநலத்திற்காக வந்தவர்கள் போய்விட்டதாகவும் குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவது குறித்தான கேள்விக்கு, உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும், சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்தால் சரிதான் என்றார்.
மேலும், “அதிமுக தொடங்கியது முதல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிறைக்கு செல்லும் வரை சசிகலா என்கிற ஒற்றை தலைமையில் தான் அதிமுக இருந்தது. தற்போது மாறி உள்ளது. மீண்டும் அது சரியாகும்” என்ற தினகரன், திமுக எதையெல்லாம் எதிர்த்துப் போராடியதோ அதையேதான் தற்போது செயல்படுத்துவதாகவும், திமுக ஆட்சியில் மகிழ்ச்சியை விட சிரிப்புதான் உள்ளது என்றும் சாடினார்.







