திருப்பதி திருமலையில் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்தவரின் வீட்டில் இருந்து கட்டுகட்டாக லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே சீனிவாசாச்சாரி என்ற முதியவர் ஒருவர் திருமலையில் பல ஆண்டுகளாக தங்கி வந்தார். இவர் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு திருநாமம் இட்டு அவர்கள் கொடுக்கும் பணத்தை பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.
திருமலையில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்த நிலையில் கோவில் விரிவாக்கப் பணிக்காக வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டு கீழ் திருப்பதியில் உள்ள சேஷாசல நகரில் அவர்களுக்கு குடியிருப்பு வழங்கியது. அதேபோல் சீனிவாசாச்சாரிக்கும் வீடு வழங்கப்பட்டது.
அந்த வீட்டில் தனியாக குடியிருந்த சீனிவாசாச்சாரியின் உடல்நிலை கடந்த வருடம் மோசமடைந்தது. பின்னர் அவர் திருமலையில் உயிரிழந்தார். உற்றார் உறவினர் யாருமில்லாத நிலையில் அவரின் உடல் திருமலையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு தேவஸ்தானம் தரப்பிலிருந்து வழங்கப்பட்டிருந்த குடியிருப்பை கையகப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள் அந்த வீட்டிற்கு சென்றனர்.
வீடு பூட்டி இருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஒரு கட்டில், 2 இரும்பு பெட்டிகள் இருந்ததைக் கண்டனர். இரும்பு பெட்டிகளை உடைத்து பார்த்தபோது கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து திருப்பதி தேவஸ்தன உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பணத்தை எண்ணியதில் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட பணத்தில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
இதையடுதது திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் குடியிருப்பை காலி செய்து பணத்தை எடுத்துச் சென்றனர். சீனிவாசாச்சாரி யாசகம் பெறுபவர் போல் இருந்தபோதிலும் அவர் வீட்டில் இலட்சக்கணக்கான பணம் இருந்தது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.







