திருப்பதி சேஷாசலம் மலையில் புதையல் எடுப்பதற்காக 80 அடி சுரங்கம் தோண்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் நாயுடு. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லூரில் இருந்து திருப்பதிக்கு குடிபெயர்ந்தார். திருப்பதியில் உள்ள எம்ஆர் பள்ளி பகுதியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். பெரும் பணக்காரனாக வேண்டும் என்று ஆசை. என்ன செய்யலாம் என்று தினமும் யோசித்து வந்துள்ளார். அப்போது, தெரிந்த நெல்லூர் சாமியார் ஒருவரிடம் ஐடியா கேட்டிருக்கிறார்.
அவர், திருப்பதி மலையில் 120 அடி சுரங்கத்தில் மெகா புதையல் இருப்பதாக அடித்துக் கூறியுள்ளார். ஆஹா கோடீஸ்வரானாக குபீர் வாய்ப்பாச்சே? என்று நம்பிய நாயுடுவுக்கு தங்கப் புதையல் கனவு தறிகெட்டு ஓடியது. அட்டகாசமாக வேலையை ஆரம்பித்தார்.
ஆறு கூலி ஆட்களை திருப்பதி சேஷாசலம் மலைக்கு அழைத்துச் சென்றார். ஒரு வருடமாக, 80 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டினர். இன்னும் கொஞ்சம் தோண்டினால், புதையல்தான் என்று நம்பி இருந்தனர்.

இந்நிலையில், திருப்பதி அடுத்த மங்கலம் பகுதியில் சேஷாசல மலைக்கு செல்வதற்காக நேற்றிரவு 3 பேர் காத்திருந்தனர். அப்போது அங்குவந்த திருப்பதி அலிபிரி போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரித் தனர். முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த அவர்கள், பிறகு திருப்பதி மலையில் புதையலுக்காகச் சுரங்கம் தோண்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஷாக்கான போலீசார், அவர்களை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று பார்வையிட்டனர். மலையில் 80 அடி நீளத்திற்கு சுரங்கம் அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரித்ததில், இன்னும் 40 அடி தோண்டினால் புதையல் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். அவர்களை கைது செய்த போலீசார், இதில் தொடர் புடைய மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பதி மலையில் புதையல் எடுக்க சுரங்கம் தோண்டிய சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.







