அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த வெளிநாட்டினருக்கான விசா தங்கும் காலக் கட்டுப்பாட்டு விதிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அந்நாட்டின் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஃப். டென்னிஸ் சேலர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) கொண்டுவந்த இறுதி விதியை நிர்வாக நடைமுறைச் சட்டத்தின் (Administrative Procedure Act – APA) கீழ் நீதிபதி ரத்து செய்தார். மேலும், மனுதாரர்கள் தாக்கல் செய்த சுருக்கத் தீர்ப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுடன், அரசுத் தரப்பு தாக்கல் செய்த கோரிக்கையை நிராகரித்தார். இந்தக் கட்டுப்பாடுகள் அவசியமானவை என்பதை நிரூபிக்கவும், அவற்றால் ஏற்படக்கூடிய செலவுகள் மற்றும் பலன்களை முறையாக மதிப்பிடவும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தவறிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த விசா பிரிவுகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது?
கடந்த ஜூலை 17, 2026 அன்று அமெரிக்க மத்திய அரசின் அதிகாரப்பூர்வப் பதிவேட்டில் வெளியிடப்பட்ட இந்தப் புதிய விதி, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரின் தங்கும் காலத்துக்கு வரம்பு நிர்ணயிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
அதன்படி,
- F-1 விசா: அமெரிக்காவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள்.
- J-1 விசா: ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட பரிமாற்றத் திட்டப் பங்கேற்பாளர்கள்.
- I விசா: வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் சர்வதேச ஊடகப் பிரதிநிதிகள்.
தற்போது நடைமுறையில் உள்ள விசா தகுதி நீடிக்கும் காலம் வரையிலான தங்கும் முறையை மாற்றி, குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே தங்க அனுமதி வழங்கவும், அதன்பிறகு புதிய நடைமுறையின் கீழ் தங்கும் காலத்தை நீட்டிக்க விண்ணப்பிக்கவும் இந்த விதி வழிவகுத்தது. இதற்கிடையே, கடந்த செப்டம்பர் 14, 2026 அன்று இந்த விதியைச் செயல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது நீதிமன்றம். இதை எதிர்த்து அமெரிக்க அரசு, முதல் சுற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோதே தற்போது இறுதித் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
விதியை ரத்து செய்ததற்கான காரணம் என்ன?
விசா மோசடிகளைத் தடுப்பது மற்றும் தேசியப் பாதுகாப்பைப் பாதுகாப்பது ஆகிய காரணங்களுக்காகவே புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்திருந்தது. ஆனால், இந்தக் கொள்கையால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யப்படவில்லை என்றும், குறைவான கட்டுப்பாடுகளைக் கொண்ட மாற்று வழிமுறைகள் குறித்து போதிய பரிசீலனை செய்யப்படவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. குறிப்பாக, சர்வதேச மாணவர்கள் மற்றும் பரிமாற்றத் திட்டப் பங்கேற்பாளர்களைக் கண்காணிக்க ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ‘Student and Exchange Visitor Information System’ (SEVIS) என்ற தகவல் அமைப்பைச் சிறப்பாகப் பயன்படுத்துவது குறித்து உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பரிசீலித்திருக்க வேண்டும் என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.
கல்வி நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பரிமாற்றத் திட்டப் பங்கேற்பாளர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து கண்காணிக்கும் இந்த அமைப்பில், நியமிக்கப்பட்ட பள்ளி அதிகாரிகள் (DSOs), பொறுப்பான அதிகாரிகள் (ROs) ஆகியோர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு அரசின் கணக்குத் தணிக்கை அலுவலகம் (GAO) வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் SEVIS அமைப்பை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஏற்கெனவே மேம்படுத்தியிருந்ததையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதில், கல்வி நிறுவனங்களின் சான்றிதழ் பெறுவதில் நடைபெறும் மோசடிகளைக் கண்டறிதல், பள்ளி அதிகாரிகளின் தகுதியைச் சரிபார்த்தல் மற்றும் இடர் மதிப்பீட்டு முறையை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
மேலும், SEVIS பதிவுகள் மூலம் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளைக் கண்டறிதல், பணம் செலுத்தி அமெரிக்காவில் தங்கும் வகையிலான மோசடிகளை விசாரித்தல், சந்தேகத்திற்குரிய விசா விதிமீறல்களை மேலதிக விசாரணைக்கு அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களின் பதிவுகள் தேசியக் குற்றத் தகவல் மையத்தின் (NCIC) தரவுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாகத் தங்குவதற்கான வாய்ப்புள்ள நபர்கள் அடையாளம் காணப்பட்டதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும், SEVIS என்பது கல்வி நிறுவனங்களுக்கான தகவல் அறிக்கை அமைப்பே தவிர, குடியேற்ற அந்தஸ்தைத் தீர்மானிக்கும் அமைப்பு அல்ல என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வாதிட்டது.
ஆனால், ஏற்கெனவே நான்கு ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்குப் புதிதாகத் தங்கும் கால நீட்டிப்பு நடைமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் மோசடிகளை எவ்வாறு தடுக்க முடியும் என்பதற்கு அந்தத் துறை உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், ஏற்கெனவே உள்ள நடைமுறையைக் கைவிட்டு புதிய முறையைக் கொண்டுவருவதால் கிடைக்கும் பலன்கள், அதற்கான செலவுகளைவிட அதிகம் என்பதை நிரூபிக்கவும் DHS தவறிவிட்டதாக நீதிமன்றம் கூறியது.
கல்வி வாய்ப்புகளைப் பாதிக்கும் கட்டுப்பாடுகள்!
வெளிநாட்டு மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகள் அமைந்துள்ளதா என்பதையும் நீதிபதி ஆய்வு செய்தார். குறிப்பாக, F-1 மாணவர் விசா தொடர்பான குடியேற்றம் மற்றும் தேசியச் சட்டத்தின் (Immigration and Nationality Act) 1101(a)(15)(F) பிரிவு குறித்து நீதிமன்றம் கவனம் செலுத்தியது. இந்தச் சட்டப் பிரிவின்படி, தகுதியுள்ள மாணவர்கள் முழுநேரக் கல்வித் திட்டத்தில் சேர்ந்து படிப்பதற்காக அமெரிக்காவுக்குத் தற்காலிகமாக வர அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால், எந்த வகையான கல்வித் திட்டங்கள் பொருத்தமானவை என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதாகவும், அதன் அடிப்படையில் சில கல்வித் திட்டங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என்றும் DHS வாதிட்டது. இதனால், முனைவர் பட்டப்படிப்பு (PhD), இரட்டைப் பட்டப்படிப்பு (Joint Degree), கல்வித் துறையை மாற்றிப் படிப்பது மற்றும் ஏற்கெனவே பெற்ற கல்வித் தகுதிக்கு இணையான நிலையில் உள்ள படிப்புகள் உள்ளிட்ட நீண்டகாலக் கல்வித் திட்டங்களைத் தொடரும் வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்படலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
2022-ஆம் ஆண்டு ‘Washington Alliance of Technology Workers v. United States Department of Homeland Security’ வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் நீதிமன்றம் மேற்கோள் காட்டியது. அதில், வெளிநாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் தன்னிடம் வைத்துக்கொண்டு, விசா வகையின் நோக்கத்துடன் தொடர்புடைய வகையில் தங்கும் காலம் மற்றும் நிபந்தனைகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மட்டுமே நிர்வாகத்துக்கு வழங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
விசா மோசடிகளைத் தடுப்பது மற்றும் தேசியப் பாதுகாப்பைப் பாதுகாப்பது என்ற DHS-ன் நோக்கங்கள், F-1 மாணவர் விசா திட்டத்தின் அடிப்படை நோக்கத்துடன் நியாயமான தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என்றும் நீதிபதி முடிவு செய்தார். இதுகுறித்து நீதிமன்றம் தனது உத்தரவில், “அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் அனுமதித்து ஊக்குவித்துள்ள செயல்பாட்டையே தடுக்கவும், ஊக்கமிழக்கச் செய்யவும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை முயற்சிக்கிறது” என்று குறிப்பிட்டது. மேலும், F-1 விசா திட்டத்தைப் பாதிக்கும் வகையில் இத்தகைய பரந்த அதிகாரத்தை DHS-க்கு சட்டம் வழங்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
டிரம்ப் அரசின் விதிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அமைப்புகள்!
டிரம்ப் நிர்வாகத்தின் புதிய விசா கட்டுப்பாட்டு விதிக்கு எதிராக உயர்கல்வி, தொழிலாளர் மற்றும் ஊடக அமைப்புகள் ஒன்றிணைந்து வழக்குத் தொடர்ந்திருந்தன. இந்த வழக்கில், உயர்கல்வி மற்றும் குடியேற்றத்துக்கான தலைவர்கள் கூட்டமைப்பு (Presidents’ Alliance on Higher Education and Immigration), சர்வதேசக் கல்வியாளர்கள் சங்கமான NAFSA, மாசசூசெட்ஸ் சுயாட்சி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் சங்கம், அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பு (AFT), கிராஜுவேட் தொழிலாளர் அமைப்பு (AFT Local 6516), நியூஸ்கில்ட்-CWA, சர்வதேச தொழிலாளர் சங்கம் மற்றும் யுனைடெட் ஆட்டோ வொர்க்கர்ஸ் (UAW Local 2322) உள்ளிட்ட அமைப்புகள் மனுதாரர்களாக இடம்பெற்றிருந்தன.
வெளிநாட்டு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்காமல், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கண்காணிப்பு அமைப்புகள் மூலமாகவே குடியேற்ற மோசடிகள் மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைக் கையாள முடியும் என்பதே இந்த அமைப்புகளின் முக்கிய வாதமாக இருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட அமெரிக்க நீதிமன்றம், டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த புதிய விசா தங்கும் காலக் கட்டுப்பாட்டு விதியை தற்போது முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.




