தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், டெல்லியில் மத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.5,000 கோடியை விடுவிக்குமாறு அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வியை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரான மாண்புமிகு ராஜ்மோகன் அவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினேன்.
தமிழகத்தின் முக்கியக் கல்வி முன்னுரிமைகள், குறிப்பாக சமக்ர சிக்ஷா திட்டம் மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயங்கள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினோம்.
தமிழகத்தின் பள்ளிக் கல்வியை மேலும் வலுப்படுத்தவும், மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு உள்ளடக்கிய வளர்ச்சியையும் சமமான கல்வி வாய்ப்புகளையும் உறுதி செய்யவும் எங்களது கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




