சென்னையில் ரூ.97-ஐ நெருங்கிய ஒரு லிட்டர் பெட்ரோல்!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 97-ஐ நெருங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின்…

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 97-ஐ நெருங்கியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு பிறகு இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மே மாதத்தில் மட்டும் 19 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாநிலங்களின் வரிவிதிப்பு காரணமாக, ஒவ்வொரு மாநிலங்களிலும் பெட்ரோல் , டீசல் விலையில் வித்தியாசம் காணப்படுகிறது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் விலை கடந்த சில தினங்களுக்கு முன்பே ரூபாய் 100-யை கடந்தது.

சென்னையை பொறுத்தவரை கடந்த 4ஆம் தேதி முதல், பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 23 காசுகள் உயர்ந்து 96 ரூபாய் 94 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை, 23 காசுகள் உயர்ந்து 91 ரூபாய் 15 காசுகளுக்கு, விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 11ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு முன்பு, இந்த போராட்டம் நடத்தப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.