கொரோனா நோய் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாதத்தில் 15-வது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது பெட்ரோல் ரூ.26 காசுகளும் டீசல் ரூ.30 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.19 காசுகளுக்கு விற்பனைச் செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ.92.17 காசுகளுக்கு விற்பனைச் செய்யப்படுகிறது. அதேபோல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை ரூ.100-யை எட்டியுள்ளது.
பெட்ரோல் மட்டும் டீசல் விலை அந்தந்த மாநிலங்களின் VAT வரிக்கு ஏற்ப விலை மாறுபடும். இதன்காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.23 காசுகள் உயர்ந்து ரூ.95.51 காசுகளுக்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.26 காசுகள் உயர்ந்து ரூ.89.65 காசுகள் விற்பனைச் செய்யப்படுகிறது.
கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.97 காசுகளும் ஒரு லிட்டர் டீசல் ரூ.87.74 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா 2-வது அலை காரணமாக நாட்டில் ஒவ்வொரு நாளும் நோய் தொற்றளர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துவருகிறது. இதன்காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் வருமானம் இழந்துள்ளனர். இந்நிலையில் மே 4-ம் தேதியிலிருந்து 15-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்காரணமாக ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலைகள் கண்ணுக்குத் தெரியாதவகையில் சிறு காசுகளாக உயர்த்தப்பட்டு தற்போது இந்நிலையை எட்டியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.







