இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்தவரை கொலை செய்ய முயற்சி

திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்தவரை கொலை செய்ய முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் பிஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் தற்போது மேல்புழுதியூர் பகுதியில் குடும்பத்துடன்…

திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்தவரை கொலை செய்ய முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் பிஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் தற்போது மேல்புழுதியூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மேலும் இவர் செங்கம் பகுதியில் மருந்து கடை ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில் வழக்கமாக வேலை முடிந்து வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திருவள்ளுவர் நகர் பகுதியில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தனக்கு லிப்ட் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

பின்னர் அவரை அழைத்துக் கொண்டு சென்ற போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் தன் பணம் கீழே விழுந்து விட்டதாகவும் வாகனத்தை நிறுத்தவும் கூறியுள்ளார். இதனை நம்பி இருசக்கர வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திய சரவணனை அடையாளம் தெரியாத வாலிபர் திடீரென தான் அணிந்திருந்த பெல்டால் கழுத்தை இறுக்கியுள்ளார்.

மேலும் அருகில் இருந்த முட்பதற்குள் இழுத்துச் சென்று கொலை செய்ய முயற்சித்து அவரிடம் இருந்த பணத்தையும் பறிக்க முயன்றுள்ளார். அதற்குள் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனம் கீழே சாய்ந்தும் சரவணனின் அலறல் சத்தம் கேட்டு புதருக்குள் சென்றபோது அடையாளம் தெரியாத வாலிபர் இருளில் தப்பி ஓடி மறைந்துள்ளார். பின்னர் சரவணனை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கம் வெளிவட்டச் சாலை பல ஆண்டு காலமாக கிடப்பில் போட்டு வேலை பாதியிலேயே நிறுத்தியுள்ளத்தால் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே சென்றுவர முடிகிறது. இதனை பயன்படுத்தி இரவு நேரங்களில் தனியாக செல்லும் இருசக்கர வாகனங்களை வழிமடக்கியும், இதுபோன்று லிப்ட் கேட்டு அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் நடமாடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாகவும் வாகன ஓட்டிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.