திருச்சி அரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து உற்சவத்தின் 10ம் நாளான இன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி அரங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கியது. இந்த விழா பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பகல் பத்து திருநாளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளுவார். பகல் பத்து உற்சவத்தின் 10ம் நாளான இன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ராப்பத்து நிகழ்ச்சிகள் நாளை முதல் நடைபெற உள்ளது. ராப்பத்தின் முதல் நாளான நாளை வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் நாளை காலை 4.45 மணிக்கு திறக்கப்படுகிறது.
அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு காலை 5 மணிக்கு வருவார். அங்கு நம்பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அதன்பின் காலை 7 மணிக்கு சாதரா மரியாதையாகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் காலை 8 மணிக்கு எழுந்தருளுவார்.காலை 9 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை பொதுஜன சேவையும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அரையர் சேவையுடன், பொது ஜனசேவையும் நடைபெறும். திருமாமணிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் நள்ளிரவு 12 மணியளவில் புறப்பட்டு மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார்.
இதையொட்டி திருச்சி அரங்கநாதர் கோயில் மின்னொளியால் விழாக்கோலம் பூண்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்கவாசல்ர திறப்பையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.