‘வாக்குமூலங்களை மட்டுமே முக்கிய ஆவணமாக வைத்து விசாரணை நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாது’

சாட்சியங்கள் மாஜிஸ்திரேட் முன்பு அளித்த வாக்குமூலங்களை மட்டுமே முக்கிய ஆவணமாக வைத்து விசாரணை நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பார்குட்டை பகுதியைச் சேர்ந்த சிவா என்பவருக்கு…

சாட்சியங்கள் மாஜிஸ்திரேட் முன்பு அளித்த வாக்குமூலங்களை மட்டுமே முக்கிய ஆவணமாக வைத்து விசாரணை நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பார்குட்டை பகுதியைச் சேர்ந்த சிவா என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பொண்ணு என்பவருடன் திருமணம் செய்யாமல் 2 ஆண்டுகளாகச் சிவா குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், வீட்டைத் தனது பெண் குழந்தைகளுக்கு எழுதி வைக்குமாறு சின்னப்பொண்ணுவிடம் சிவா கேட்டுள்ளார். அதற்கு சின்னப்பொண்ணு மறுத்ததால் அவரை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த சின்னப்பொண்ணு, வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

கடந்த 2010 செப்டம்பர் மாதம் நடந்த சம்பவம் தொடர்பாக, சின்னப்பொண்ணுவின் உறவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் விரைவு நீதிமன்றம், சிவாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து 2018 செப்டம்பரில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவா தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஏ.டி.ஜெகதீஸ்சந்திரா அமர்வு விசாரித்தது.

அண்மைச் செய்தி: ‘சாதி மறுப்பு திருமணம் புரிந்தவர்களின் சான்றிதழ்களை வழங்க மறுத்த அதிகாரி; உத்தரவை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம்’

விசாரணையின் போது, சம்பவத்தை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் 3 சாட்சிகளும், 5 முக்கிய சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாகி விட்டதாகவும், சம்பவம் நடத்து 16 நாட்கள் கழித்து மாஜிஸ்திரேட் முன்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டதற்காக மனுதாரரை விடுதலை செய்துவிட முடியாது எனவும், மனுதாரர் சிவாவின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் மருத்துவ சாட்சிகளையும் கவனத்தில் கொண்டே விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், இந்த மேல்முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புகார் கொடுத்த உறவினர் உள்ளிட்ட சாட்சிகள் பிறழ் சாட்சியங்களாக மாறிய நிலையில், பொதுவான சாட்சியங்களைக் கொண்டு குற்றத்தை நிரூபிக்க போலீசார் எந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை எனவும், சாட்சியங்கள் கூறிய வாக்குமூலத்தை (மாஜிஸ்திரேட் முன்பு சாட்சியின் வாக்குமூலம்) மட்டுமே முக்கிய ஆவணமாக வைத்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் கூறி, சிவாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.