மீண்டும் சூடுபிடிக்கும் குட்கா வழக்கு!

முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் உட்பட 9 அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த சி.பி.ஐக்கு அனுமதி வழங்கியது தமிழ்நாடு அரசு. முன்னாள் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன், முன்னாள்…

முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் உட்பட 9 அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த சி.பி.ஐக்கு அனுமதி வழங்கியது தமிழ்நாடு அரசு. முன்னாள் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் வழக்கு தொடர மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு அனுப்பிய பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு செங்குன்றம் குடோனில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்களுடன் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில் தடையை மீறி குட்கா விற்பனை செய்யப் பல உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது. அதனையடுத்து பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், எஸ்.பி விமலா மற்றும் கலால் துறை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையாக வைத்து அவர்களை நேரில் அழைத்து விசாரணையும் நடத்தினர். அதன் பின்னர் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாது காப்புத் துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், மத்திய கலால் வரித் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேர் மீது இந்தியத் தண்டனை சட்டத்தில் ஒரு பிரிவிலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 பிரிவுகளிலும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.

அண்மைச் செய்தி: ‘‘சாட்சியங்கள் மாஜிஸ்திரேட் முன்பு அளித்த வாக்குமூலங்களை மட்டுமே முக்கிய ஆவணமாக வைத்து விசாரணை நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாது’ – சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக அறியப்பட்டதை வைத்து அமலாக்கத் துறையினர் குட்கா குடோன் உள்ளிட்ட வழக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். அமலாக்கத் துறையினர் விசாரணையில் சட்டவிரோதமாகச் சம்பாதித்த 639 கோடி ரூபாயை வைத்து பல மாநிலங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்குச் சொந்தமான 246 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கினர்.

இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கில் தொடர்பிருப்பவர்களாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 11 அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்யத் திட்டமிட்டு, அதன் அப்படையில் குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 9 பேரின் பட்டியலை அனுப்பி அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசுக்கு சி.பி.ஐ கடிதம் அனுப்பியிருந்தது.

அமைச்சர் உள்ளிட்ட உயர் பொறுப்பு வகித்தவர்கள் என்பதால் அரசு தரப்பில் அனுமதி பெற்ற பின்பு தான் வழக்கில் சேர்க்க முடியும் என்ற நடைமுறையால் சி.பி.ஐ கடிதம் அனுப்பிய நிலையில், குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி ரமணா, சி.விஜயபாஸ்கர் உட்பட 9 அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த சி.பி.ஐ-க்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகிய இரு ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரவும், விசாரணை நடத்தவும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு அரசு அனுப்பிய பதில் கடிதத்தில் தெரிவித்து சி.பி.ஐ-க்கு தமிழ்நாடு அரசு பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளதால் குட்கா வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.