சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், யூடியூப் ட்ரெண்டிங்கில் 2ம் இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சூர்யா – சிறுத்தை சிவா படத்தின் பூஜை நடைபெற்று, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குநர் சிறுத்தை சிவாவின் கனவுப் படம் எனக் கூறப்படும் இப்படத்தை 2 பாகங்களாக 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. சென்னை, கோவா உள்ளிட்ட இடங்களில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 24ஆம் தேதி துவங்கியது. முதல் நாள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிடோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். மேலும் இப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் வெளிவரும் இப்படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருப்பதை மோஷன் போஸ்டர் வழி அறிய முடிகிறது. இதில் நிறைய VFX காட்சிகள் இருப்பதாகவும், இத்திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று வெளியான ‘சூர்யா 42’ படத்தின் மோஷன் போஸ்டர் ஒரே நாளில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் 2ம் இடத்தில் உள்ளது. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரெய்லர் 9 மில்லியன் பார்வைகளைக் கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.









