ஒசூர் அருகே 40 ஆண்டுகளாக பரிசலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மக்கள், கைவிடப்பட்ட மேம்பால பணிகளை விரைவாக தொடர கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த சூளகிரி ஊராட்சிக்குட்பட்டது போகிபுரம். 40 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் ஆட்சி காலத்தில் சூளகிரி – சின்னாறு இடையே அணைக்கட்டுவதற்காக காமநாயக்கன்பேட்டை, ஒண்டியூர், போகிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். எனினும், அணைக்கு மத்தியில் போகிபுரம் கிராமத்தின் ஒருபகுதி மக்கள் வெளியேற்றப்படாமல் அங்கேயே இருந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது போகிபுரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எனினும், இங்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை. அங்கன்வாடி, நியாயவிலைக்கடை,தொடக்கப்பள்ளி என எதுவுமே இங்கு இல்லை. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கும் 5 கிமீ தூரத்தில் உள்ள சூளகிரிக்குத்தான் செல்ல வேண்டும். வேறு வழியிலை.
ஆண்டில் 10 மாதங்கள் சூளகிரி – சின்னாறு அணையில் நீர் இருக்கும் என்பதால் 400 மீட்டர் தூரத்தை பரிசலில் கடந்துதான் அக்கறைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
15 அடி ஆழ நீரில் ஆபத்தான பரிசல் பயணத்தை போகிபுரம் கிராம மேற்கொண்டுவருகின்றனர். கர்ப்பிணிகள், உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் அவசரமாக செல்ல முடியாத நிலை உள்ளது. இது குறித்து அரசு அதிகாரிகளிடம் முறையிட்டதை அடுத்து, 2 ஆண்டுகளுக்கு முன்பு போகிபுரம் கிராமத்திற்கு செல்ல மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பின்பு பணிகள் 30% அளவிலேயே நின்றுவிட்டன. அணையில் நீர் அதிகமாக உள்ளதால் பணிகளை தொடர முடியாதென பொதுப்பணித்துறையினர் கைவிட்டதாக சொல்லப்படுகிறது.
40ஆண்டுகளாக தொடரும் இந்த அவலநிலை காரணமாக மாணவர்கள் பலர் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் உள்ளனர். இக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பெண் கொடுக்கவும் தயங்கும் நிலை உள்ளது. மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வசித்து வரும் தங்களுக்கு மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை வைக்கும் போகிபுரம் மக்கள், கைவிடப்பட்ட உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை விரைவாக தொடங்க வேண்டுமென வேண்டுகோள் வைத்துள்ளனர்.







