பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுகிறதா?

பொறியியல் மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தள்ளி வைப்பது குறித்து உயர்கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் பி.இ., பி.டெக்.,…

பொறியியல் மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தள்ளி வைப்பது குறித்து உயர்கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளில் சேருவதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 157 பேர் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டனர். மொத்தம் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் இருக்கின்றன.முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு சனிக்கிழமை முதல் இன்று (புதன்கிழமை) வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்கி 4 சுற்றுகளாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சிறப்பு பிரிவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கும் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதை சிறப்பு பிரிவில் நடத்தாமல், பொதுப்பிரிவு கலந்தாய்வு நடத்தும் அதே தேதியில் நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், திட்டமிட்டபடி பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வு ? நாளை தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாணவர்களுக்கு நாளையே பொறியியல் கலந்தாய்வை நடத்துவதா? அல்லது தள்ளி வைப்பதா? என உயர்கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. நீட் தேர்வு முடிவுகள் தாமதமாவதால் கலந்தாய்வை தள்ளி வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து தேசிய தேர்வு முகமையுடன் பேசிவருவதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு முடிவுகளுக்கேற்ப பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், நீட் தேர்வு முடிவுகளுக்கு முன்பாக பொறியியல் கலந்தாய்வை நடத்தினால், தேர்வு முடிவுகள் வெளியான பின் பல இடங்கள் காலியாகும் சூழல் ஏற்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.