ஜப்பானிய தூதரான ஹிரோஷி சுசுகி, ஒரு சாதாரண குடிமகனை போல் மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்தது மட்டுமின்றி, ஃபுட்பாத் ஷாப்பிங்கிலும் ஈடுபட்டுள்ள சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவுக்கான ஜப்பானிய தூதராக இருப்பவர் ஹிரோஷி சுசுகி. இவர் நேற்று மும்பை சென்றிருந்த நிலையில், அங்கு அவர் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார். பின்னர் அங்கிருந்து மும்பையின் தெருக்களில் கால் நடையாக நடக்கத் துவங்கிய அவர், மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்ததோடு, நடைபாதை வியாபாரிகள் விற்கும் கடைகளுக்கும் சென்று சட்டை வாங்க பேரம் பேசியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூகவலைதளபாகத்தில் பகிர்ந்திருந்த ஹிரோஷி சுசுகி, மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு “நான் மும்பையில் இருக்கிறேன்! என போஸ்ட் செய்திருந்தார். அதேபோல், ரூ.100க்கு சட்டை விற்கும் கடையில் நின்று போட்டோ எடுத்துக்கொண்ட சுசுகி, அந்த புகைப்படத்தையும் பகிர்ந்து “என்ன பேரம் பேசலாம் ! நான் வாங்கட்டுமா ?” என கேள்வி எழுப்பி இருந்தார்.
தற்போது இந்த புகைப்படங்கள் அதிகப்படியான லைக்குகளை குவித்து வைரலாகி வருவதோடு, ஒரு ஜப்பானிய தூதரக அதிகாரி ஒருவர், நகரத் தெருக்களில் சாதாரண மனிதரைப் போல் சுற்றித்திரிந்து எந்த ஆரவாரமும் இல்லாமல் ஷாப்பிங் செய்துள்ள சம்பவம் நெட்டிசன்களிடையே ஆச்சரியத்தையும், பாராட்டுகளையும் பெற்று
வருகிறது .
https://twitter.com/HiroSuzukiAmbJP/status/1664233173411332097?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








