போக்குவரத்து ஊழியர்களுடன் நடைபெற்ற 7ம் கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் சிவசங்கள் தெரிவித்தார்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் 14வது ஊதிய ஒப்பந்ததின் 7ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கோபால், நிதித்துறை இணை செயலாளர் அருண்சுந்தர் தயாளன், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமி காந்தன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 67 தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.
நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத சூழ்நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 34க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டதாக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நிறைவுக்கு பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்திதார். அப்போது பேசிய அவர், 7ம் கட்டமாக நடந்த பேச்சுவார்த்தை இன்று வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. மேலும் பேச்சுவார்த்தை ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி மகளிர் இலவச பேருந்து பேட்டா வழங்கப்படும். அதன்படி பேமெட்ரிக் முறையில் 5 சதவீத உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு படிகள் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நலநிதி ரூ.3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது 1.9.2022 முதல் அமலுக்கு வரும். அதோடு ஓய்வூதிய தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இலவச பயண சலுகை வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கு சிறப்பு நிதியாக பணி ஒன்றிக்கு ரூ.300 வழங்கப்படும். கடந்த ஆட்சியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, 21 நாள்களை பணி காலமாக எடுத்து கொள்ளப்படும். அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 34 மேற்பட்ட சங்கங்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 4 ஆண்டாக உயர்த்தப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இன்றைய நிகழ்கால நிதி நிலையில் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை ஆராய்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.







