மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே மனநல பாதிக்கப்பட்டவரான பென்டிங் ஜான் என்பவரை கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி காவல்துறையினர் வீடு புகுந்து தாக்கி நித்திரவிளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பெண்டிங் ஜான் பாளையம்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஜூன் 27 ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் கணவரின் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு உரிய நீதி கிடைக்க உத்தரவிட வேண்டுமென மாநில மனித உரிமை ஆணையத்தில் அவரது மனைவி சுவர்ணா பாய் புகார் அளித்திருந்தார்.
இதை விசாரித்த ஆணைய உறுப்பினரான சித்தரஞ்சன் மோகன்தாஸ், குற்றம்சாட்டப்பட்ட நபர் நிரபராதி அல்லது குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவர் என்று கருதும் விதத்தில் நடத்தப்பட வேண்டுமென்ற மனநிலையை அனைத்து காவல்துறையினரின் மனதில் கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த அணுகுமுறையால் காவல்துறையின் மனித உரிமை மீறல்களின் எண்ணிக்கை குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டத்தைக் காப்பவர்கள் தேவையற்றவர்களாக காணப்படுவது கவலை அளிப்பதாகவும், காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதில் மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து காவல்துறைக்கு முறையான பயிற்சி அளிக்கும்படியும் வலியுறுத்தி உள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநிலை சரியில்லாதவர்களை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், அவர்களை கண்டறியும் வகையிலும், அவர்கள் பயப்படாதா வகையிலும் செயல்பட காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். மேலும், உயிரிழந்த பென்டிங் ஜான் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன், குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.







