“வருவாய் மதிப்பீட்டில் வெளிப்படைத் தன்மையே முக்கியம்” – ஓபிஎஸ்-க்கு நிதியமைச்சர் பதில்!

வருவாய் மதிப்பீட்டில் வெளிப்படைத் தன்மையே முக்கியம் என்று ஒபிஎஸ் கேள்விக்கு நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலளித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. அப்போது முன்னாள் முதலமைச்சர் ஓபன்னீர்செல்வம் பேசுகையில், “எந்த அறிவிப்பும் இல்லாத வேதனைப்படும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை உள்ளது.

10 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. ஒரு அரசு கடன் வாங்காமல் இருக்க முடியாது. கடன் மூலம் எத்தனை திட்டங்கள் மக்களுக்கு சென்றடைந்தன என்பதுதான் முக்கியம். கடந்த கால ஆட்சியில் கடன் வாங்கப்பட்டது குறித்து விமர்சனம் செய்கிறார்கள். அரசு அதிக அளவு கடன் வாங்கிக் கொள்ள முடியாது அதற்கும் ஒரு எல்லை உண்டு. ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் நீங்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாவது இடம்பெற்றுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் மரிய வில்சன்,

“2021-22 ஆம் ஆண்டில், அப்போது தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.1,35,641 கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது

அதன்பின்னர் திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில், அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த திருத்திய பட்ஜெட் மதிப்பீட்டில், 2021-22 ஆம் ஆண்டுக்கான மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.1,26,644 கோடி என குறிப்பிடப்பட்டது.

அதாவது, முதலில் தாக்கல் செய்யப்பட்ட மதிப்பீட்டுக்கும், பின்னர் தாக்கல் செய்யப்பட்ட திருத்திய மதிப்பீட்டுக்கும் இடையே ரூ.8,997 கோடி வித்தியாசம் உள்ளது. எனவே, திருத்திய பட்ஜெட் மதிப்பீடு குறித்து நீங்கள் பேசும்போது, அந்த காலகட்டத்திலும் இதுபோன்ற வித்தியாசங்கள் இருந்தன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதேபோல், திமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2,29,574 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 2025-26ஆம் ஆண்டுக்கான உண்மையான வருவாய் ரூ.1,92,493 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது

இதன் அடிப்படையில் பார்க்கும்போது, 2025-26 ஆம் ஆண்டின் உண்மையான வருவாயை ஒப்பிடும்போது இடைக்கால பட்ஜெட்டில் சுமார் 19 சதவீத உயர்வு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் தாக்கல் செய்துள்ள திருத்திய பட்ஜெட்டில் Business as Usual என்ற அடிப்படையில், சுமார் 11 சதவீத வளர்ச்சியை மட்டுமே கணக்கில் எடுத்துள்ளோம். அதன்படி, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2,14,990 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாங்கள் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, அதிகப்படியான வளர்ச்சியை காட்டாமல், வழக்கமான வருவாய் வளர்ச்சியின் அடிப்படையில் இந்த மதிப்பீட்டை தாக்கல் செய்துள்ளோம். அதிகமாக கணக்கிட்டு 19 சதவீத வளர்ச்சியை காட்டுவதற்கு பதிலாக, நாங்கள் நியாயமான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டை வழங்கியுள்ளோம். இது தொடர்பாக தங்களது தகவலுக்காக இந்த விபரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.