பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்ட தடம் புரண்ட ரயில்

தடம்புரண்டு விபத்திற்குள்ளான ரயில் பெட்டிகளை 9 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ரயில்வே ஊழியர்கள் மீட்டனர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்வதற்காக பணி மனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நடைமேடை…

தடம்புரண்டு விபத்திற்குள்ளான ரயில் பெட்டிகளை 9 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ரயில்வே ஊழியர்கள் மீட்டனர்.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்வதற்காக பணி மனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நடைமேடை எண் ஒன்றில் எடுத்து வரப்பட்ட பயணிகள் மின்சார ரயில் சரியாக நேற்று மாலை 4.25 மணி அளவில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான முதல் பெட்டியை மீட்க மட்டும் 5 மணிநேரத்திற்கும் மேல் ஆனது. இதர பெட்டிகளை அகற்றி ஏற்கனவே பணிமனைக்கு ஊழியர்கள் அனுப்பி வைத்தனர். 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து விபத்துக் காலங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு இன்ஜின் மூலம் விபத்துக்குள்ளான ரயிலை மீட்டனர்.

தடம்புரண்ட ரயில் மீட்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை கோட்ட மேலாளர் கணேஷ், எதிர்பாராத விதமாக நேற்று இந்த விபத்து நடைபெற்றதாகவும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். தடம்புரண்ட ரயில் முற்றிலுமாக மீட்கப்பட்டதாக கூறினார். மேலும் இந்த விபத்தின் சேத மதிப்பு இதன் பிறகுதான் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அது குறித்தான தகவல் பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.

மேலும், இன்று காலை நடைமேடை எண் 1-ல் இருந்து ரயில் சேவைகளை மீண்டும் தொடங்கி உள்ளோம் எனவும் இந்த விபத்தினால் எந்த ஒரு ரயில் சேவையும் ரத்து செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்கிறோம் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.