ரயில் பயணி ஒருவர் கழிவறைக்கு செல்ல வழி இல்லாததால் இருக்கைகள் மீது நடந்து செல்லும் சர்க்கஸ் பயணம் குறித்த வீடியோ ட்விட்டரில் வைரல் ஆகியுள்ளது.
அப்ஜித் திப்கே என்ற ட்விட்டர் பயனாளர் ரயிலில் பயணித்த தனது உறவினரின் நிலை என ஒரு வீடியோவை வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அந்த வீடியோவில் ரயில் பெட்டி முழுவதும் பயணிகள் நிரம்பி வழிகின்றனர். எந்த அளவுக்கு என்றால் நடைபாதையில் நடந்து செல்லக்கூட இடமில்லாமல், சின்ன இடைவெளி கூட விடாமல் நெருக்கிப்பிடித்து பயணிகள் பயணிக்கின்றனர்.
அப்போது ஒரு பயணி கழிவறைக்கு செல்ல வழி இல்லாததால் இருக்கைகள் மீது கால் வைத்து சர்க்கஸில் தாண்டுவது போல் ஒவ்வொரு இருக்கையாக தாண்டி செல்கிறார். இந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அப்ஜித் திப்கே என்ற அந்த நபர், ரயிலில் பயணித்த எனது உறவினர் கழிவறைக்கு செல்ல சாகச விளையாட்டில் ஈடுபட்டுள்ளதை பாருங்கள் என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு ஒரே நாளில் 15 லட்சம் பார்வையாளர்களை தாண்டி வைரல் ஆகியுள்ளது. அதோடு பலர் தங்களது மோசமான ரயில் பயண அனுபவங்களை பகிந்து ரயில்வே துறையை விமர்சித்தும் வருகின்றனர்.
அதில் ஒருவர் மூன்றாம் வகுப்பு ஏசியில் கூட சில நேரங்களில் இந்த நிலையே காணப்படுவதாக கூறியுள்ளார். மற்றொரு ட்விட்டர் பயனாளர் அனைத்து நீண்ட தூர ரயில் பயணங்களும் இப்படிதான் உள்ளது என பதிவிட்டுள்ளார். மூன்றாம் நபர் ஒருவர் 23 கோச்சுகள் உள்ள ஒரு ரயிலில் இரண்டே இரண்டு ஜென்ரல் கோச் மட்டுமே உள்ளதாகவும், ஏசி மற்றும் சிலிப்பர் கோச்சுக்கு நிகராக ஜென்ரல் கோச் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். இவர்களை போன்று தங்களது கோரிக்கைகளையும், ஆதங்கங்களையும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பதிவிட்டு வருவதோடு, அப்ஜித் திப்கேவின் பதிவை பகிந்தும் வருகின்றனர்.








