சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக நேற்று ஒரே நாளில் நாளில் 3,702 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும், போக்குவரத்தை திறம்பட மேம்படுத்தி ஒழுங்குபடுத்தவும் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், சிக்னல்களை மீறுபவர்கள், திருப்பம் இல்லாத இடத்தில் திரும்புவோர், நிறுத்தல் கோட்டை மீறி நிறுத்துபவர்கள், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தல் போன்ற விதிமீறல்களால் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கிறது.
இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க நேற்று (27.02.2023) சென்னை பெருநகரின் 150 முக்கிய போக்குவரத்துச் சந்திப்புகளில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சந்திப்புகளில் ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்து விதிமீறுபவர்களை எச்சரிக்கப்பட்டு அவர்களின் விதிமீறல்களின் தன்மையை மேற்கோள் காட்டப்பட்டன. இது போன்று வாகன நிறுத்த கோட்டினை தாண்டி நிறுத்தப்பட்ட வாகனங்களை வீடியோ மற்றும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த தொடர் நடவடிக்கையால் சென்னை பெருநகரில் நேற்று ஒரே நாளில் 3702 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.







