முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம் செய்திகள் சினிமா

திரை மொழியை… புது மொழியாக்கிய… லிஜோ ஜோஸ் எனும் மந்திரச்சொல்


சா. அன்சர் அலி - முதன்மை செய்தியாளர்

கட்டுரையாளர்

லிஜோ ஜோஸ் பெல்லிஷேரி… இன்றைய தினத்தில் இந்திய திரையுலகம் உச்சரிக்கும் மந்திரச்சொல்.

மலையாள திரையுலகில் அதிக செலவின்றி அதிரவைக்கும் படைப்புகளை உருவாக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிஷேரியின் சமீபத்திய படைப்பு நண்பகல் நேரத்து மயக்கம். பைலிங்குவல் (மலையாளம் – தமிழ்) திரைப்படமான இதில் கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் ஒரு குழு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புகையில் நாயகன் திடீரென ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தச் சொல்லி இறங்கி சென்று விடுகிறான்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாட்டின் குக்கிராமமான அங்கே 2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஒருவனின் இல்லத்திற்கு சென்று ஒரு நாள் முழுவதும் அவன் குடும்பத்தினரும் அதிசயிக்கும் வகையில் அந்த நபராகவே வாழ்கிறான். அடுத்த நாள் நண்பகல் நேரத்து சிறு உறக்கத்திற்கு பின் தான் யாரென உணர்ந்து மீண்டு செல்கிறான். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு விளம்பரப்படத்தின் தாக்கத்தில் எடுக்கப்பட்டதாக இயக்குநர் லிஜோ ஜோஸ் ஒத்துக்கொண்டாலும் இந்த படம் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

மலையாள திரையுலகில் சுமார் 100 படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த ஜோஸ் பெல்லிஷேரியின் மகனான லிஜோ, 2010 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நாயகன் திரைப்படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். கிரைம் த்ரில்லர் படமான நாயகன் லிஜோவின் முதல் படமென்றால் நம்ப முடியாத அளவிற்கு டைரக்‌ஷனின் அசத்தி இருந்தார். அடுத்தடுத்து சிட்டி ஆஃப் காட், பாம்பே மார்ச் 12, ஆமென் என 7 படங்களை இயக்கிய லிஜோவின் பரிமாணம் மாறியது அங்கமாலி டயரீஸ் திரைப்படம் மூலமாகத்தான்.

கேரளாவின் அங்கமாலி பகுதியில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை காட்சிப்படுத்தியதில் வெற்றிகண்ட லிஜோவின் கதை சொல்லும் முறை ரசிகர்களை கட்டிப்போட்டது. கேரளா தாண்டி பல்வேறு மாநிலங்களிலும் லிஜோ ஜோஸ் பெல்லிஷேரியை ரசிகர்கள் இணையத்தில் தேடத்தொடங்கினர்.இவர் இயக்கிய ஜல்லிக்கட்டு திரைப்படம் தமிழ்நாட்டு ரசிகர்களாலும் பெருமளவில் கொண்டாடப்பட்டது.தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு உணர்வோடு ஒன்றிப்போனது. ஆனால் இவர் இயக்கிய ஜல்லிக்கட்டு வேறு ஒரு பரிமாணத்தை வெளிப்படுத்தியது. தன்னுடைய திரைபபடங்களில் உணவிற்கு தனி இடம் கொடுக்கும் லிஜோ ஜல்லிக்கட்டு படத்தில் மனிதனுக்கும் உணவுக்கும் இடையேயான பந்தத்தை அரக்கத்தனமாய் சொல்லி அடித்திருப்பார்.

2018 ஆம் ஆண்டு லிஜோ இயக்கிய ஈ.ம.யௌ அதாவது ஆங்கிலத்தில் சொல்வதென்றால் R.I.P. பெரும் வரவேற்பைப் பெற்று விருதுகளை அள்ளிக்குவித்தது. தந்தை மீது அதீத அன்பு கொண்ட மகன், தனது தந்தையுடன் மது அருந்திக் கொண்டு இருக்கும்போது தனது தாத்தாவின் இறுதி ஊர்வலம் ஊர் மெச்ச நடைபெற்றது குறித்து கேட்டு தெரிந்து கொள்கிறான். உச்சகட்ட போதையில் தனது தந்தைக்கும் அதேபோன்றதொரு அல்லது அதைவிட மேலான இறுதி ஊர்வலத்தை நடத்துவதாக வாக்களிக்கிறான். அன்றிரவே தந்தை இறந்துவிட அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளை ஒரு சிறு கடற்கரை கிராமத்தின் உள்ளேயே சுற்றி, ஒரே நாளில் நடப்பவற்றை நெஞ்சம் அதிர கண்களுக்கு விருந்து படைத்திருப்பார்.

இவர் இயக்கிய சுருளி திரைப்படம் அதிக அளவில் விமர்சனம் செய்யப்பட்டது. அதில் நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களும் அடங்கும். படம் பலருக்கு புரியாத புதிராக இருக்க மற்றொரு புறம் சகட்டுமேனிக்கு பாராட்டுகளும் குவிந்தன.

இந்த நிலையில் தான் வெளியாகி நல்ல விமர்சனங்களை அள்ளிக்குவித்திருக்கிறது நண்பகல் நேரத்து மயக்கம். லிஜோவின் கதைகளில் பெரும்பாலானவை தினந்தோறும் நமக்கு காணக்கிடைப்பவை. கதை மாந்தர்களும் நம்மோடு அனுதினமும் பழகும் நபர்களைப் போன்றவர்கள். ஒரு புள்ளியில், ஒரு குறுகிய நிலப்பரப்பில், ஒற்றை வரிக்கதையை விரிவுபடுத்தும் அனல் போன்ற இயக்குநர் லிஜோ கொண்டாடப்படுவதில் ஆச்சரியம் இல்லை. பெருஞ்செலவில், பிரமாண்டம் என திரைப்படங்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கும் இந்திய திரையுலகில் குறைந்த செலவில் தரமான படங்களை இயக்கிவரும் லிஜோ ஜோஸ் பெல்லிஷேரியை மலையாள இயக்குநர் என குறுக்குதல் ஒப்பாகாது. அவர் எல்லா மொழி சினிமா நேசர்களுக்கும் உரித்தானவர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எந்த சூழ்ச்சியாலும் மக்கள் நீதி மய்யத்தை வீழ்த்த முடியாது : கமல்ஹாசன்

Jeba Arul Robinson

தொடர் கனமழை எதிரொலி; வேகமாக நிரம்பும் நீர்த்தேக்கங்கள்

EZHILARASAN D

இன்று ஜம்மு-காஷ்மீருக்கு செல்கிறார் பிரதமர்

Janani