இனி இந்தியாவுடன் அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்வதை கைவிட்டு விட்டு, நம் இந்திய ரூபாயிலேயே வர்த்தகத்தை மேற்கொள்ள வங்கதேசம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நம் நாட்டு பண மதிப்பிலேயே வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில், 19வது நாடாக வங்கதேசம் இடம் பெற்றுள்ளது.
உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு இடையே நடைபெறும் வர்த்தகமானது பெரும்பாலும் டாலரை அடிப்படையாக கொண்டே செய்யப்பட்டு வருகிறது . இருப்பினும் சில நாடுகள் தங்களது வர்த்தகத்தை அவர்களது பண மதிப்பை வைத்தே இன்றளவும் செய்து வருவதோடு, மேலும் சில நாடுகள் குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டும், இத்தகைய பண பரிவர்த்தனை கொள்கையை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், இதுவரை இந்தியாவுடன் அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்து வந்த வங்கதேசம், இனி இந்திய ரூபாயிலேயே வர்த்தகத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வங்கதேசத்துடன் இந்தியா பல மாதங்களாக பேச்சு நடத்தி வந்த நிலையில், கடந்த 11ம் தேதி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஒரு முடிவு மேற்கொள்ளப்பட்டது. அதன் படி வங்கதேசத்தின் இரு முக்கிய வங்கிகளான சோனாலி வங்கி மற்றும் ஈஸ்டர்ன் வங்கிகளுடன், இந்திய வங்கிகளான எஸ்.பி.ஐ மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகள் இணைந்து, வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டு. இரு நாட்டு பணங்களான டாக்கா மற்றும் இந்திய ரூபாயில் இனி வர்த்தகம் நடைபெற முடிவு
எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்தியாவின் ரிசர்வ் வங்கி மற்றும் எஸ்.பி.ஐ வங்கி பிரதிநிதிகள், அந்நாட்டு சோனாலி மற்றும் ஈஸ்டர்ன் வங்கி பிரதிநிதிகள் கலந்து கொண்டதோடு, இம்முடிவிற்கு பல்வேறு துறையினரும், வர்த்தகர்களும் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நம் நாட்டு பண மதிப்பிலேயே வர்த்தகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் உள்ள ரஷ்யா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் வரிசையில் 19வது நாடாக வங்கதேசமும் இடம் பெற்றுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









