குடியிருப்பு பகுதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்லும் அவலம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் குடியிருப்பு பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் அரசு நிதி உதவி பெறும்…

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் குடியிருப்பு பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பகுதிக்கு முன்பாக செல்லும் கழிவு நீர் கால்வாய் கடந்த சில மாதங்களாக தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு பள்ளியின் முன்பு கழிவு நீர் தேங்கி அங்கிருந்து சாலையில் வெளியேறுகிறது.

மேலும், அதே இடத்தில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைத்தொட்டி உள்ளதால்
குப்பைகளும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.கால்வாய் தூர்வார கோரி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் செல்வதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கழிவு நீரை கடந்து செல்லக் கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவு நீர் கால்வாயை தூர்வாரி அதற்கான வழித்தடத்தை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தாமதபடுத்தினால் பொதுமக்களை திரட்டி
போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.