வாணியம்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 கோடி மதிப்பிலான உபகரணங்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தொக்குப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சரவணா அகர்பத்தி கம்பெனி இயங்கி வருகின்றது. இதை உமா மகேஸ்வரன் என்பவர் வாடகைக்கு கட்டிடம் எடுத்து ஒப்பந்த அடிப்படையில் ஊதுபத்தி, கொசுபத்தி, மற்றும் சாம்பிராணி உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதில் சுமார் 600 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை கண்ட அக்கம், பக்கம் உள்ள மக்கள் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் தீ அணைக்கு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே சுமார் 4 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்த போதிலும் தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான உபகரணங்கள், மூலப்பொருள் தீயில் கருகி சேதம் அடைந்தன.
—கோ. சிவசங்கரன்







