ஆஸ்கர் விருது பெற்ற தி எலிஃபேன்ட் விஸ்பரர்ஸ் படத்தில் நடித்த ரகு, பொம்மி ஆகிய யானைக்குட்டிகளை காண உதகையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
விடுமுறை தினத்தையொட்டி உதகைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமிற்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இதுமட்டுமின்றி தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் வார விடுமுறையான இன்று முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமிற்கு வெளிநாட்டு மற்றும் உள்நாடு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆஸ்கார் விருது பெற்ற ஆவண குறும்படமான “தி எலிபன்ட் விஸ்பரரர்ஸ்” படத்தில் நடித்த ரகு மற்றும் பொம்மி ஆகிய குட்டி யானைகளை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அப்போது , தி எலிபென்ட் விஸ்பரரர்ஸ் ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினருடன் இங்கு வருகை தந்திருந்த சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், தி எலிபென்ட் விஸ்பரரர்ஸ் ஆவணக் குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி ஆகியோரை திரையில் பார்த்ததை விட தற்போது நேரில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
இதேபோல் கன்னியாகுமரியிலும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சூரியன் உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டனர்.
அதேபோல் பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காகவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகிய இடங்களிலும் சுற்றுலா பணிகளின் கூட்டம் அலைமோதியது. அதிலும் இந்த இடங்களுக்கு செல்ல குறித்த அளவிலான படகுகளே இயக்கப்பட்டதால், 2 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிடையில் காத்திருந்து படகில் சென்று பார்வையிட்டு வந்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா