தமிழ்நாட்டில் தொடர்மழை காரணமாக விளைச்சல் பாதித்ததால், தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்தது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. விளைநிலங்களில் நீர் தேங்கியதால், தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வரத்து குறைந்ததால், தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி, ஒரு கிலோ நாட்டுத் தக்காளியின் விலை 100 ரூபாயாகவும், நவீன தக்காளியின் விலை 120ஆகவும் விற்பனையானது
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி சந்தையிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு தக்காளி விற்பனைக்காக அனுமதிக்கப்படுகிறது. கடந்த மூன்று வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக, தக்காளி பயிரிட்ட நிலங்களில் தண்ணீர் தேங்கி செடிகள் வீணானதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சில்லறை விற்பனை விலை உயர்ந்து, ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரை விற்பனையாகிறது
சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளிகள் அழுகி வீணானது. இதன் காரணமாக சந்தைக்கு வரத்து குறைந்ததால், ஓமலூர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை எட்டியது








