கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்பு கட்டாயம் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட நிலையில், பருவத்தேர்வுகள் நேரடி தேர்வுகளாக நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானதால், மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராடிய மாணவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இந்த பருவத்தேர்வை மட்டும் ஆன்லைன் மூலம் நடத்த அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில், மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் எனவும் மாணவர்களுக்கு நேரடித் தேர்வு ஜனவரி மாதம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கங்களில் சுழற்சி முறையில் இல்லாமல் வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் எனவும் மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத் திட்டங்களை வழங்கிட வேண்டும் எனவும் உயர்க்கல்வித்துறை சார்பில் கல்லூரி, பல்கலைக்கழகங்கங்களுக்கு அறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







