தமிழ்நாட்டில் வளர்ச்சி மிகுந்த மாவட்டமாக கோவை மாவட்டத்தை மாற்றி காட்டுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் 89 கோடியில் நிறைவேற்றப்பட்ட 120 பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், 500 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும், இப்பகுதி மக்களுக்கு நிறைய செய்ய காத்திருப்பதாக கூறினார். கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்காக 1,132 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
கோவை மக்களின் கூடுதல் மருந்துவ வசதிக்காக 16 கோடி ரூபாய் செலவில் நலவாழ்வு மையங்கள் அமைக்க விரைவில் அரசாணை வெளியிடப்படும் என குறிப்பிட்டார். இந்தியாவில் தொழில் வளர்ச்சி நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் எனக்கூறிய முதலமைச்சர், கோவை முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் வளர்ச்சி மிகுந்த மாவட்டமாக கோவை மாவட்டத்தைக் மாற்றி காட்டுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார்.
இதனை தொடர்ந்து 440 கோடி ரூபாய் மதிப்பில் 23 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி, மற்றும் எம்பிக்கள், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மேடைக்கு முன்பாக முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது, விழாவுக்கு வந்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது இருக்கைக்குச் சென்ற போது, அவரை அழைத்த முதலமைச்சர், விழா மேடையில் அமருமாறு கூறினார். இதையடுத்து, வானதி சீனிவாசன் மேடைக்குச் சென்று அமர்ந்தார்.







