தக்காளி விளைச்சல் அதிகமாக இருப்பதால் கடந்த மாதத்திலிருந்து தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஒரு கிலோ தக்காளி ரூ.2க்கு விற்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி உள்ள போச்சம்பள்ளி அதன் சுற்ற வட்டார பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.1 இலட்சம் வரை செலவு தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.
ஆனால் தற்போது தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக அவற்றிற்கு கட்டுபடியான விலை கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதியடைந்து உள்ளனர். விவசாயிகளிடம் இருந்து மொத்த விலையில் பெறப்படும் ஒரு கிலோ ரூ.2க்கும், சில்லறை விலையில் ரூ.5க்கும் தக்காளி விற்பனைச் செய்யப்படுகிறது. இதனால் தக்காளி பறிக்கும் கூலி கூட கிடைக்காமல் விவசாயிகள் வேதனையடைந்துளனர்.

கட்டுப்படியான விலை கிடைக்காத காரணத்தால் போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளான புலியூர், தாதம்பட்டி, அரசம்பட்டி, மத்தூர், சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளியை அறுவடை செய்து கூலி கொடுக்க முடியாத காரணத்தால் விளை நிலங்களிலேயே அறுவடை செய்யாமல் விட்டுள்ளனர்.விளைச்சல் அதிகரிப்பு காரணமாக விலை குறைவு காரணமாக வெளி மாவட்ட வியாபாரிகளும் வாங்க வருவதில்லை. எனவே பயிருக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து வென்ற வெள்ளி கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயி எஸ்.ரங்கநாதன் அவர்களிடம் கேட்டபோது, “ஒரு ஏக்கருக்கு சுமார் 1 லட்சம் வரை செலவு செய்து தக்காளி வளர்த்து வந்தேன். ஒரு நாளைக்கு 2 டன் தக்காளி அறுவடை செய்கிறேன். கிலோ ஒன்றுக்கு ரூ.10க்கும் விற்பனையானால் மட்டுமே லாபம் பார்க்கக்கூடிய நிலையில், தற்போது விளைச்சல் அதிகரிப்பு காரணத்தால் கிலோ ரூ.2க்கு விற்பனையாகிறது. எங்களது தோட்டத்தில் சுமார் 25 கூலியாட்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கான பறிக்கும் கூலி கூட கிடைக்காது என்கிற காரணத்தால் தக்காளியை அவர்களே பறித்து தக்காளியை விற்று அவர்களுக்கு தேவையான கூலியை பிரித்துக்கொள்ளச் சொல்லியுள்ளேன். விவசாயம் செய்வதே வேதனையாக உள்ளது” என மனம் நொந்து பேசினார்.







