நமது நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே மத்திய அரசின் மிக முக்கிய இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆன்மிக குரு மாதா அமிர்தானந்த மயி-ன் மடம் சார்பில், ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் ஆசியாவின் மிகப் பெரிய தனியார் மருத்துவமனையாக அமிர்தா மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
விழாவில் மாதா அமிர்தானந்த மயி, முதலமைச்சர் மனோகர் லால் கத்தார், துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆன்மிகம் மற்றும் சமூக சேவையில் கவனம் செலுத்தி வரும் ஒரு நிறுவனம், இந்த மருத்துவமனையை அமைந்திருப்பது பொதுமக்கள் தனியார் கூட்டுறவுக்கு மிகச் சிறந்த உதாரணம் என தெரிவித்தார். இத்தகைய பொதுமக்கள் தனியார் கூட்டுறவு முயற்சி, அடித்தட்டு மக்களையும், தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களையும் உயர்த்தக்கூடியது என கூறினார்.
நாடு தற்போது கல்வியிலும், சுகாதாரத்திலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஆன்மிக குரு மாதா அமிர்தானந்த மயியின் இந்த சேவை நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பு என குறிப்பிட்டார்.
அன்பு, சேவை, கருணை, தியாகம் ஆகியவற்றின் வடிவமாக மாதா அமிர்தானந்த மயி திகழ்வதாக பாராட்டு தெரிவித்த பிரதமர், அவர் நம் அனைவருக்கும் ஊக்கத்தை அளிப்பவராகத் திகழ்கிறார் என தெரிவித்தார்.
ஆசியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையான அமிர்தா மருத்துவமனை ரூ. 6,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 2,600 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.










